இன்று என்னுடைய நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஒரு வீடு கட்டும் திட்டத்துடன் மனைகளை தேடிக்கொண்டிருக்கிறார். நானோ ஒரு அடுக்கு மாடி குடியிருப்பாளன். உரையாடலின் இடையே அடுக்கு மாடி வீடு விரும்பத்தக்கதா அல்லது தனி வீடு நன்றா என்று சிறு வாக்குவாதம்.
நண்பரின் கருத்தின்படி,
- அடுக்கு மாடி குடியிருப்பின் மதிப்பு குறைந்துகொண்டே இருக்கும்.
- அந்த கட்டிடத்தின் வாழ்நாள் முடிந்தபின் நம்மிடம் இருப்பது அந்த பிரிக்க முடியாத நிலத்தின் உரிமை மட்டுமே.
- எப்படியும் அந்த பிரிக்க முடியாத நிலத்தின் அளவு மிகவும் குறைவு, எனவே அதை விற்கும் விலையும் அறுதியானதே.
- நம்முடைய தனிப்பட்ட அன்னியோன்யமான ஒரு இடமாக அது இருக்காது.
- என்ன செய்ய வேண்டுமென்றாலும் குடியிருப்போர் நலச்சங்கத்தின் அனுமதி வேண்டும்.
- எனவே அடுக்கு மாடி குடியிருப்பை தேர்வு செய்வது ஒரு புத்திசாலிதனமான முடிவு அல்ல என்பதே.
இதற்கு என்னுடைய எதிர் கருத்துக்கள்,
- முதலில் என்னிடம் ஒரு தனி வீடு வாங்குவதற்கான பொருளாதாரம் இல்லை.
- என்னுடைய வீடு நகரத்தின் மிக முக்கியமான பகுதியில் உள்ளது. இந்த இடத்தில் நான் தனி வீடு வாங்குவது கனவில் வேண்டுமானால் நடக்கலாம். (நம் நண்பர் வீடு தேடிக்கொண்டிருப்பது நகரத்திற்கு வெளியே. ஆனால் அவருடைய வாதம், இன்னும் சில வருடங்களில் அப்பகுதியும் நகரமாகிவிடும்)
- நானும் என் மனைவியும் பணிக்கு செல்பவர்கள். காலை வேளைகளில் வீட்டில் யாரும் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. என்னுடைய அடுக்கு மாடி குடியிருப்பை பூட்டிவிட்டு தைரியமாக வெளியே செல்ல முடியும் (காவலர்கள் உண்டு).
- எங்கள் குடியிருப்பில் நீச்சல் குளம் உண்டு. உடற்பயிற்சி செய்வதற்கான அத்துனை வசதிகளும் உண்டு (உடற்பயிற்சி கருவிகள் உட்பட). பூப்பந்து விளையாட திடல் உண்டு. சிறுவர்கள் விளையாடும் இடம் உண்டு. வீட்டு விழாக்கள் நடத்துவதற்கு தனி சமுதாயக்கூடம் உண்டு (ஒரு நாள் வாடகை ரூ. 500 மட்டுமே).
- இத்துனையும் நான் என்னுடைய தனி வீட்டில் ஏற்பாடு செய்ய முடியுமா. அதற்கு கட்டாயம் நான் ஒரு கொடிகளின் கோமானாக இருக்க வேண்டும்.
அதற்காக நான் தனி வீடு வேண்டமேன்றோ, தனி வீடு கட்டுவதென்பது புத்திசாலிதனமில்லை என்றோ சொல்லவில்லை. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சில விருப்பங்கள், முக்கியத்துவங்கள் இருக்கின்றன. அவற்றின்படி அவரவர் முடிவெடுத்துக்கொள்ள வேண்டியதே.
உள்ளக்கிடக்கைகள்...!!!